18th ஜன 2025
உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும், மேலும் இது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை அணுகும் மக்களுக்கு சிறந்த உள்ளூர் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது என சுகாதார மற்றும் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் எதிர்கால திட்டங்களை அறிமுகம் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாவின்னவில் அமைந்துள்ள இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு, நாட்டின் மிகப் பெரிய உள்ளூர் மருந்து உற்பத்தி ஆலையை வைத்திருக்கும் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் எதிர்காலத் திட்டங்கள், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை அமைச்சர் பார்வையிட்டார். இதன்போது இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்தித் தொழிற்சாலையின் அனைத்து அம்சங்களையும் அமைச்சர் பார்வையிட்டதுடன், இயந்திரங்களைப் பழுதுபார்த்தல், புதிய உற்பத்தி இயந்திரங்களை கொள்வனவு செய்தல், சோலார் பேனல்கள் போன்ற உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளையும் ஆராய்ந்தார் அத்துடன் தேவையான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக, இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் பானங்கள், வலி நிவாரணிகள், சுகாதாரப் பொருட்கள் போன்றவற்றை போட்டிச் சந்தையில் சமர்ப்பித்தல் மற்றும் விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். இதன்போது உயர்தர தயாரிப்புகளை வழங்குவதற்கு எப்போதும் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் மருந்து உற்பத்தியில் உள்ள சேவையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதில் கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் மருந்துகள், தாவரங்கள் மற்றும் மூலிகைகள் பயிரிடும் முறைகளை தயாரிக்க திட்டமிடுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் சந்தன திலகரத்ன, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உள்ளூர் மருத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி கருணாரத்ன, இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கீதாமணி கருணாரத்ன, முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஜே. மாரசிங்க, பொது முகாமையாளர் தம்மிக்க பாதுக்க மற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.