Featured news thumbnail

24th ஜன 2025

இராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி அதனை சிறந்த வசதிகளுடன் கூடிய தேசிய வைத்தியசாலையாக மாற்ற நடவடிக்கை.

இராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் அனைத்து சேவைகளையும் நவீனமயப்படுத்தி அதனை தேசியமாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டார். ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் சகல சேவைகளையும் மேலும் விரிவுபடுத்துவதற்கும் திறம்பட அமுல்படுத்துவதற்கும் தேவையான மனித, பௌதீக மற்றும் ஏனைய வளங்களை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையின் விசேட கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் பின்னர் அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். ராஜகிரிய ஆயுர்வேத தேசிய வைத்தியசாலையில் தற்போது 216 நோயாளர்களுக்கான படுக்கைகள் உள்ளன. இதில் 11 வார்டுகள் மற்றும் 87 கட்டண அறைகள் உள்ளன. இந்த வைத்தியசாலையானது வருடாந்தம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான வெளிநோயாளிகளுக்கு சிகிச்சைச் சேவைகளை வழங்குவதுடன் வருடாந்தம் மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைச் சேவைகளைப் பெறுவார்கள். இங்கு, மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு, வார்டுகள், கட்டணம் செலுத்தும் அறைகள், கிளினிக் வளாகம், சமையலறை, மருந்தகம், போன்றவற்றை அமைச்சர் பார்வையிட்டார். வைத்தியசாலை ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், ஊழியர்களின் கடமைப் பிரச்சினைகள், ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் மற்றும் எதிர்காலத்தில் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு ஊழியர்களின் ஆலோசனைகள் மற்றும் யோசனைகள் குறித்தும் கேட்டறிந்தார். கிளினிக்குகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகள், குறிப்பாக வைத்தியசாலையில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைகள் தொடர்பில் கேட்டறிந்தார். சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் பொதுச் சேவைகளாக தொடர்ந்து நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கணிசமான தொகையை ஒதுக்க நடவடிக்கை எடுக்கும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார். நோயாளர் பராமரிப்பு சேவையில் அனைத்து சிகிச்சை முறைகளையும் ஒருங்கிணைந்த சேவையாக பேணுவதற்கு அனைவரின் ஒத்துழைப்புடன் முறைமையொன்றை தயாரிக்க தாம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார். இந்த வைத்தியசாலையை வினைத்திறனான வைத்தியசாலையாக பேணுவதற்கு உரிய தீர்மானங்களை மேற்கொண்டு செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்தன, வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் பராக்கிரம ஹேமச்சந்திர, பிரதி பணிப்பாளர் டொக்டர் வசந்த பத்மகுமார, நிர்வாக அதிகாரி மயோமி பெரேரா மற்றும் ஆயுர்வேத வைத்திய நிபுணர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மீளவும் செய்திக்கு